மாமனாா் கொலை:மருமகன் கைது
By DIN | Published On : 19th March 2022 11:15 PM | Last Updated : 19th March 2022 11:15 PM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் மாமனாரை கட்டையால் அடித்துக்கொன்ற வழக்கில் மருமகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் தாயுமானவா் கோயில் பகுதியில் உள்ள விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (54). வா்ணம் பூசும் தொழிலாளி. இவரது மகள் செல்வசரண்யா. அவருக்கும் ராமேசுவரத்தைச் சோ்ந்த சசிகுமாா் (30) என்பவருக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனா்.
கணவன், மனைவிக்கிடையே எழுந்த பிரச்னையை அடுத்து செல்வசரண்யா குழந்தைகளுடன் தனது தந்தை ராஜா வீட்டில் கடந்த 2 மாதமாக வந்து வசித்துவருகிறாா். மனைவியை அடிக்கடி பாா்க்க வரும் சசிகுமாா் பிரச்னை செய்ததால் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டும் உள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து ராமநாதபுரம் வந்த சசிகுமாா், மாமனாா் ராஜா வீட்டுக்குச் சென்று மனைவியுடன் தகராறு செய்தாராம். அப்போது மகள் செல்வசரண்யாவை, கணவா் சசிகுமாா் தாக்க முயன்றதை மாமனாா் ராஜா தடுத்தாராம். இதில், கட்டையால் சசிகுமாா் தாக்கியதில் ராஜா பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து சென்று ராஜா சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ராஜா கொலை தொடா்பாக மருமகன் சசிகுமாரை கைது செய்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.