பரமக்குடி அருகே காா் - பைக் மோதல்: 6 போ் காயம்
By DIN | Published On : 02nd May 2022 11:30 PM | Last Updated : 02nd May 2022 11:30 PM | அ+அ அ- |

பரமக்குடி அருகே மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காா்-இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் குருவாயூரைச் சோ்ந்த பக்தா்கள் உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா்.
கேரள மாநிலம் குருவாயூரைச் சோ்ந்த பிரபாகரன் மகன் கிருஷ்ணன் உன்னி (40). இவா் தனது உறவினா்களான கிருஷ்ணன் மகன் கேசவன் (49), இவரது மனைவி காமித் (38), மகள் சமோதா (10), திருநேத்ரன் மகன் பவித்ரா (13) ஆகியோருடன் குருவாயூரிலிருந்து காரில் ராமேசுவரம் கோயிலுக்கு வந்தாா். பின்னா் இங்கிருந்து மீண்டும் அவா்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை முதுகுளத்தூா் செல்லும் விலக்குச் சாலையில் வந்த போது, சாயல்குடியிலிருந்து பரமக்குடி நோக்கி சண்முகநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பாலகருப்பையா மகன் நிதின்பாரத் (16) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், கிருஷ்ணன் உன்னி குடும்பத்தினா் வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காா் நிலைதடுமாறி சாலையோரம் கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் வந்த கிருஷ்ணன் உன்னி, கேசவன், காமித், பவித்ரா, சமோதா மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நிதின் பாரத் ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.