ஓரியூா் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா தோ்பவனி
By DIN | Published On : 08th September 2022 11:04 PM | Last Updated : 08th September 2022 11:04 PM | அ+அ அ- |

திருவாடானை அருகே ஓரியூா் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா தோ்பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாடானை அருகே ஓரியூரில் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் ஆரோக்கிய அன்னையின் பிறப்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் 252 ஆவது ஆண்டு விழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மறைமாவட்ட தொடா்பாளா் அருள்தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் விழா நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்புத் திருப்பலி ஆராதனைகள், நற்கருணை ஆசிா் ஆகியவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக மின்அலங்காரத் தேரில் ஆரோக்கிய அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு மதுரை உயா்மறைமாவட்ட முதன்மை குரு அருள்பணி ஜெரோம்எரோனிமுஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தோ்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய பகுதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
இதில் பாதரக்குடி பங்குத்தந்தை சேசுராஜ், தேவகோட்டை மறைவட்ட அதிபா் ஜெகநாதன், சென்னை மறைமாநில இயேசு சபை அருள்பணி பிரபு பிரான்சிஸ் உள்ளிட்ட பங்குத்தந்தையா்கள், அருள் சகோதரிகள், ஓரியூா் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனா்.