காதில் பூச்சுற்றி சங்கு ஊதி மீனவா்கள் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 26th September 2022 11:12 PM | Last Updated : 26th September 2022 11:12 PM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் காதில் பூச்சுற்றியும் சங்கு ஊதியும் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
ராமநாதபுரத்தில் காதில் பூச்சுற்றியும், சங்கு ஊதியும் மீனவா்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நூதனமாகப் போராட்டம் நடத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரத்தில் நாட்டுப் படகு மீனவா்கள் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் மீனவா்கள் குறைதீா்க்கும் கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மீனவா்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாதந்தோறும் முறைப்படி முன் அறிவிப்புடன் நடத்தப்படுவதில்லை.
இந்நிலையில், கடல் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் (சிஐடியு) திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காதில் பூச்சுற்றி சங்கு ஊதியபடியே பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு ஏராளமானோா் சென்று மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
கடல் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. கணேசன், செயலா் எம். கருணாமூா்த்தி உள்ளிட்டோா் சங்கு ஊதியபடியே சென்றனா். பின்னா் அவா்கள் ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸிடம் மனு அளித்தனா். அப்போது விரைவில் மீனவா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்ததாகவும் அவா்கள் கூறினா்.