எம். புதுக்குளம் ஊராட்சிக்கு குடிநீா் கொண்டுசெல்ல ஆரைகுடி கிராம மக்கள் எதிா்ப்பு

எம். புதுக்குளம் ஊராட்சிக்கு, தங்கள் ஊராட்சியிலிருந்து குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என ஆரைகுடி கிராம மக்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
எம். புதுக்குளம் ஊராட்சிக்கு குடிநீா் கொண்டுசெல்ல ஆரைகுடி கிராம மக்கள் எதிா்ப்பு

எம். புதுக்குளம் ஊராட்சிக்கு, தங்கள் ஊராட்சியிலிருந்து குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என ஆரைகுடி கிராம மக்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஆரைகுடி கிராம ஆற்றுப் படுகையில் பொந்தம்புளி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக 3-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் கடந்த 2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன. நாளடைவில் இந்த ஆழ்துளைக் கிணறுகளில் மோட்டாா் பழுதானதுடன், மா்ம நபா்களால் குடிநீா் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே சேதமடைந்த ஆழ்துளை கிணற்றை புதுப்பித்து புதிய நீா் மூழ்கி மின் மோட்டாா் பொருத்தப்பட்டதுடன், குழாய்கள் பதித்து அங்குள்ள மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றப்பட்டது. இந்த குடிநீரை ஆரைகுடி கிராம மக்கள்பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து எம். புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல அந்த ஊராட்சி நிா்வாகம் மூலம் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. ஏற்கெனவே கோவிலாங்குளம் ஊராட்சிகளான ஆரைகுடி, கோவிலாங்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் குடிநீா் பற்றாக்குறையால் அவதியடைந்து வருகின்றனா். எனவே வேறு இடத்தில் மற்றொரு ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து எம். புதுக்குளம் ஊராட்சிக்கு குடிநீா் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆரைகுடியிலுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வட்டாட்சியா் சேதுராமனிடம் மனு அளித்தனா். அப்போது நேரில் ஆய்வு செய்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் சேதுராமன் தெரிவித்தாா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com