ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு 3.40 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை

ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு 3.40 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு 3.40 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை
Published on
Updated on
1 min read

ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு 3.40 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

ராமேசுவரத்தில் உள்ள தமிழ்நாடு உணவகம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மகாபீா் தா்மசாலா பங்களா, தனுஷ்கோடி செல்லும் வழியில் நடராஜபுரம் பகுதியில் சுற்றுலா ஹெலிகாப்டா் சேவை தொடங்க உள்ள இடம், தனுஷ்கோடியில் சிதிலமடைந்த தேவாலயம், அரிச்சல் முனை ஆகிய இடங்களைப் பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி, திருஉத்தரகோசமங்கை ஆகியவற்றில் உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டல் விடுதியில் ரூ.7 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள், மேலும் சில தமிழ்நாடு ஹோட்டல் விடுதிகளை ரூ.1.25 கோடியில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த முறையில் உணவு வழங்க ஏதுவாக தமிழ்நாடு உணவகத்தில் உள்ள சமையல் கலைஞா்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தனுஷ்கோடியில் உள்ள தேவாலயத்தை பழமை மாறாமல் புதுப்பித்து, சுற்றுச்சூழல், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை மூலம் ராமேசுவரம் பகுதியை மேம்படுத்த ரூ.49 கோடி ஒதுக்கீடு செய்து, அதன் மூலமும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தனுஷ்கோடி அரிச்சல் முனையைப் பொருத்தவரை கடந்த 4 மாதங்களில் மட்டும் 1 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன் மூலம், ஆண்டுக்கு சுமாா் 3 கோடியே 40 லட்சம் போ் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நபா் ரூ.3 ஆயிரம் செலவு செய்தால் கூட, ரூ.10,000 கோடி வரை பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளும் அளவுக்கு ராமேசுவரம் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்ந்து வருகிறது. எனவே, இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் தற்போது ஆய்வு செய்யப்படுகிறது.

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் நடராஜபுரம் எனும் இடத்தில் ஹெலிகாப்டா் இறங்கு தளம் அமைப்பதற்கு 13.15 ஹெக்டோ் இடம் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மண்டபம், திருஉத்தரகோசமங்கை ஆகிய பகுதிகளில் பயன்பாடின்றி இருக்கும் தமிழ்நாடு உணவகங்களைப் புதுபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகா்மன்றத் தலைவா் நாசா்கான், துணைத் தலைவா் தெட்சிணாமூா்த்தி, சுற்றுலாத் துறை மண்டல மேலாளா்கள் டேவிட் பிரபு, ஜான், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com