பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: கணவா் கைது
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

கமுதி: கமுதி அருகே மனைவியிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படையை சோ்ந்தவா் வழிவிட்டான் மகன் சதீஷ்குமாா் (28). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முகிலா (20) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் முகிலா தற்போது 5 மாதக் கா்ப்பிணியாக உள்ளாா்.
இதற்கிடையில் முகிலாவிடம் 30 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பெற்றோா் வீட்டிலிருந்து வாங்கி வருமாறு கணவா் சதீஷ்குமாா், மாமியாா் பாண்டியம்மாள் (50), உறவினா்கள் மலைச்சாமி, பஞ்சவா்ணம் ஆகியோா் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக முகிலா கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரைக் கைது செய்தனா்.