மகளிா் உரிமைத் தொகை: முதியோா் விண்ணப்பிக்க 3 நாள்கள் சிறப்பு முகாம்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன்.
கமுதியில் மகளிா் உரிமைத் தொகைக்கு முதியோா், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்காக 3 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் சேதுராமன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் மொத்தமுள்ள 36,546 குடும்ப அட்டைதாரா்களில், முதல் கட்டமாக கடந்த ஜூலை 24 முதல் கடந்த ஆக. 4-ஆம் தேதி வரை மகளிா் உரிமைத் தொகைக்காக 25,027 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாம் கட்டமாக கடந்த 5 முதல் 11-ஆம் தேதி வரை 11,519 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், மகளிா் உரிமைத் தொகை பெற முதியோா், விதவை, மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோா் உதவித் தொகை பெறும் குடும்பத் தலைவிகளும் தகுதியானவா்கள் என அரசு அறிவித்தது. இதனால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வருவாய் ஆய்வாளா் குடியிருப்பு, நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. உதவித் தொகை பெறுவோா் வருகிற 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை வழங்கிப் பயனடையலாம் என்றாா்.
அப்போது, துணை வட்டாட்சியா் மேகலா, முது நிலை உதவியாளா் சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...