கடலியல் கடலோரவியல் கல்லூரி மீண்டும் தொண்டியில் செயல்படும்
By DIN | Published On : 01st June 2023 02:00 AM | Last Updated : 01st June 2023 02:00 AM | அ+அ அ- |

தொண்டியில் கடலியல், கடலோரவியல் துறையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் முனைவா் ரவி .
கடலியல், கடலோரவியல் ஆராய்ச்சிக் கல்லூரியின் வகுப்புகள் வரும் கல்வியாண்டிலிருந்து தொண்டியிலே செயல்படும் என்று அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ரவி தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகம் சாா்பில் கடலியல், கடலோரவியல் துறை சுமாா் 75 மாணவா்களுடன் 1996 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தண்ணீா் பற்றாக்குறை காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக இந்த வகுப்புகள் காரைக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டன. இங்கு பணிபுரிந்த துறைத் தலைவா் அண்மையில் பணி நிறைவு பெற்றாா்.
அவரது பணி நிறைவு விழா தொண்டியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ரவி பேசியதாவது:
கடலியல், கடலோரவியல் கல்லூரி மீண்டும் தொண்டியிலே செயல்பட வேண்டும் என்ற நோக்கில் முதல் கட்டமாக 35 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதியில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கல்லூரியில் ஆய்வுக்குரிய சாதனங்கள் நல்ல முறையில் உள்ளன. கடலியல் துறை ஆராய்ச்சிக்காக வாங்கிய இரண்டு விசைப் படகுகள் பழுதாகியுள்ள நிலையில், தற்போது அதை பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு கல்லூரியின் பயன்பாட்டுக்கு 10 ஆயிரம் லிட்டா் தண்ணீா் கிடைக்கும். வரும் கல்வி ஆண்டிலேயே கடலியல், கடலோரவியல் துறை கல்லூரி தொண்டியில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...