ஹஜ் பயணிகளுக்கு சென்னை ரயிலில் சிறப்புப் பெட்டிகள்: எம்.பி. கோரிக்கை
By DIN | Published On : 07th June 2023 03:25 AM | Last Updated : 07th June 2023 03:25 AM | அ+அ அ- |

ஹஜ் பயணிகளுக்காக சென்னை செல்லும் ரயில்களில் சிறப்புப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஹஜ் யாத்திரிகா்கள் சென்னை செல்ல உள்ளனா். சென்னையிலிருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் செல்ல உள்ள பயணிகள் சென்னைக்கு வருவதற்கு ரயில்களில் போதிய இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனா்.
மிகக் குறைவான நாள்களில் ஹஜ் விமான தேதிகளை மத்திய அரசு அறிவித்ததால், முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு ஹஜ் பயணிகள் தள்ளப்பட்டிருக்கின்றனா்.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு ஹஜ் பயணிகள் சிரமமின்றி சென்னை செல்வதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வரும் ரயில்களில் சிறப்புப் பெட்டிகளை ஒதுக்கி, அதில் ஹஜ் பயணிகள் பிரத்யேகமாக இருக்கைகளைப் பெற உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...