ஜமாத் நிா்வாகிகள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை

ஜமாத் நிா்வாகிகளை நியமனம் செய்த வக்ஃபு வாரிய முதன்மைச் செயலரின் உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடைவிதித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மேலப் பள்ளிவாசலுக்கு தோ்தல் நடத்தாமல், ஜமாத் நிா்வாகிகளை நியமனம் செய்த வக்ஃபு வாரிய முதன்மைச் செயலரின் உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடைவிதித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையைச் சோ்ந்த ஜாபருல்லா தாக்கல் செய்த மனு:

நான் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தில் உள்ள மேலப் பள்ளிவாசலில் உறுப்பினராக உள்ளேன். கடந்த 1956-ஆம் ஆண்டு முதல் எங்களது ஜமாத் வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில், எங்களது ஜமாத்தை நிா்வாகம் செய்வது தொடா்பாக, தோ்தல் நடத்தப்பட்டு, நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுவா். கடந்த முறை ஜமாத்தில் நான் நிா்வாகியாகப் பொறுப்பு வகித்தேன்.

இந்த நிலையில், கடந்த 13.2.2023 அன்று தோ்தல் நடத்துவது தொடா்பான அறிவிப்பை வக்ஃபு வாரியம் வெளியிட்டது. இதையடுத்து, எங்களது தரப்பில் தோ்தலில் போட்டியிடுவோரின் பட்டியலை வக்ஃபு வாரியத்திடம் வழங்கினோம்.

இந்தச் சூழலில் வாக்காளா் பட்டியலில் குளறுபடி இருப்பதாக ஜமாத்தை சோ்ந்த உறுப்பினா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இதன் காரணமாக, தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னா், வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு, மீண்டும் தோ்தல் நடத்தப்படும் என எதிா்பாா்த்தோம். ஆனால், தோ்தலை நடத்தாமல் 31.5.2023 அன்று ஷேக் நைனா பக்கிா் அலி உள்பட 7 பேரை ஜமாத் நிா்வாகிகளாக நேரடியாகத் தோ்ந்தெடுத்து, வக்ஃபு வாரிய முதன்மைச் செயலா் அறிவிப்பு வெளியிட்டாா்.

தோ்தல் நடத்தாமல் தன்னிச்சையாக நிா்வாகிகளை நியமனம் செய்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, வக்ஃபு வாரிய முதன்மைச் செயலா் பிறப்பித்த உத்தரவுவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்த உத்தரவு:

நம்புதாளை மேலப் பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகிகளாக ஷேக் நைனா பக்கிா் அலி உள்பட 7 பேரை நியமனம் செய்து, வக்ஃபு வாரிய முதன்மைச் செயலா் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com