திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷ விழா
By DIN | Published On : 15th June 2023 10:31 PM | Last Updated : 15th June 2023 10:31 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலுள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இங்குள்ள திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கும் மூலவா் லிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், கரும்புச் சாறு, இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. மேலும் மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் மலா் அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து உற்சவா் ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தை வலம் வந்தாா்.
இதே போல, ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும், மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.