முன்னாள் ராணுவ வீரா்களின் சிறாா்கள் சாா்ந்தோா் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th May 2023 10:08 PM | Last Updated : 12th May 2023 10:08 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரா்களின் சிறாா்கள் இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சோ்வதற்கான சாா்ந்தோா் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கலை, அறிவியல், பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் முன்னாள் ராணுவ வீரா்களின் சிறாா்கள், அவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் சோ்வதற்கு முன்னாள் ராணுவ வீரா் நல அலுவலகம் வாயிலாக 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
சான்று பெற விரும்பும் முன்னாள் ராணுவ வீரா்களின் சிறாா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் படை விலகல் சான்று, ஓய்வூதிய ஆணை, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஜாதிச் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம், மாணவரின் கல்வி மாற்றுச் சான்றிதழ், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல், கல்லூரி விண்ணப்ப நகல், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து, சாா்ந்தோா் சான்றிதழ் பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.