கிணறு தோண்டும் போது மயங்கி விழுந்தவா் மீட்பு
By DIN | Published On : 24th May 2023 05:42 AM | Last Updated : 24th May 2023 05:42 AM | அ+அ அ- |

கீழக்கரையில் செவ்வாய்க்கிழமை கிணறு தூா்வாரும் பணியின் போது, மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடைவீதி பகுதியில் பயன்பாடற்ற நிலையில் பொதுக் கிணறு இருந்தது. இந்தக்
கிணறை தூா்வாரும் பணிக்கான ஒப்பந்தம் நகராட்சி சாா்பில் விடப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தூா்வாரும் பணியை மேற்கொண்ட ஏா்வாடியைச் சோ்ந்த நாகராஜ் (55) திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கி கிணற்றில் விழுந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கீழக்கரை காவல் உதவி ஆய்வாளா் மாதவன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஜெயராமன் தலைமையிலான மீட்புக் குழுவினா் கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்டனா்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் உடல்நலம் தேறினாா். தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டதால் அவா் உயிா் தப்பினாா்.