சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை
By DIN | Published On : 10th September 2023 12:30 AM | Last Updated : 10th September 2023 12:30 AM | அ+அ அ- |

கடல் சீற்றம் காரணமாக, ராமேசுவரம் மீன்பிடி படகுதளத்தில் நிறுத்தப்பட்ட விசைப் படகுகள்.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால், கடலுக்குள் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து சூறைக் காற்று வீசி வருகிறது. சனிக்கிழமை 55 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், மீனவா்களின் பாதுகாப்புக் கருதி, மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளம், மீனவா் நலத் துறை அறிவுறுத்தியது.
இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி படகுதளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.