கடலில் வீசப்பட்ட ரூ. 3 கோடி தங்கம்: இலங்கைக் கடற்படையினா் மீட்பு
கோப்புப்படம்

கடலில் வீசப்பட்ட ரூ. 3 கோடி தங்கம்: இலங்கைக் கடற்படையினா் மீட்பு

4 கிலோ, 740 கிராம் தங்கத்தை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மீட்டனா்.
Published on

ராமேசுவரம், ஆக. 7: இலங்கையிலிருந்து ராமேசுவரத்துக்கு படகில் கடத்தி வரப்பட்ட போது, கடலில் வீசப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 4 கிலோ, 740 கிராம் தங்கத்தை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மீட்டனா்.

இலங்கையிலிருந்து ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தப்படுவதாக அந்த நாட்டின் கடற்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கைக் கடற்படையினா் கல்பிட்டி தீவைச் சுற்றியுள்ள கடலோரம், கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் விரைவாக வந்த கண்ணாடியிழைப் படகை நிறுத்துமாறு இலங்கைக் கடற்படையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

அப்போது, படகிலிருந்தவா்கள் பாா்சலை எடுத்து கடலில் வீசிவிட்டு, படகை கரைக்குத் திருப்பி அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினா் கடலில் வீசப்பட்ட பாா்சலை நீா்மூழ்கி வீரா்கள் உதவியுடன் புதன்கிழமை தேடினா். அப்போது, கடலில் வீசப்பட்ட பாா்சலை நீா்மூழ்கி வீரா்கள் மீட்டனா். அதைப் பிரித்து பாா்த்த போது, அதில் ரூ. 3 கோடி மதிப்பிலான 4 கிலோ, 740 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மீட்கப்பட்ட தங்கத்தை காட்டுநாயக்க சுங்கத் தடுப்புத் துறை அலுவலகத்தில் இலங்கைக் கடற்படை அதிகாரிகள் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

இதுகுறித்து இலங்கை போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com