கமுதி தொழிலாளி துபையில் உயிரிழப்பு: உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரக் கோரிக்கை
கமுதியைச் சோ்ந்த தொழிலாளி துபையில் உயிரிழந்தாா். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் குமரவேல் (40). இவருக்கு மனைவி கலைச்செல்வி (35), மகன் ராஜ்குமாா் (18), மகள் சித்ராதேவி(15) உள்ளனா்.
இவா் கடந்த 14-ஆம் தேதி துபை நாட்டுக்கு முகவா் மூலம் கூலி வேலைக்குச் சென்றாா். ஆனால், மறுநாள் (ஆக.15) இரவே உடல் நலம் பாதிக்கப்பட்டு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நெறிஞ்சிப்பட்டியில் உள்ள குமரவேல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குமரவேலின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினரும், உறவினா்களும் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், இதுதொடா்பாக வருகிற 19-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக குமரவேலின் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

