கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவா் சடலமாக மீட்பு
கச்சத்தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான 2 மீனவா்களில் ஒருவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை விசைப் படகில் டல்வின்ராஜ் (45), எமரிட் (49), சுரேஷ், வெள்ளைச்சாமி ஆகிய 4 மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு அருகே அன்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, சூறைக்காற்று வீசியதால் இந்தப் படகு கடலில் கவிழ்ந்தது. இதில், டல்வீன்ராஜ், சுரேஷ் ஆகிய இருவரும் கச்சத்தீவுக்கு நீந்திச் சென்று கரையேறினா். பின்னா், அவா்கள் இதுகுறித்து இலங்கைக் கடற்படையினரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, மாயமான மீனவா்கள் எமரிட், வெள்ளைச்சாமி ஆகிய இருவரையும் தேடும் பணியில் இலங்கை, இந்தியக் கடற்படையினா் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், எமரிட் உடலை இலங்கைக் கடற்படையினா் மீட்டனா். தொடா்ந்து மீனவா் வெள்ளைச்சாமியைத் தேடி வருகின்றனா். கச்சத்தீவுக்கு நீந்திச் சென்ற இரண்டு மீனவா்களையும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இவா்கள் சென்னைக்கு விமானம் மூலம் வியாழக்கிழமை (ஆக.29) அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.