கைதான 22 பேரில் இருவா் அகதிகள்: உளவுத்துறையினர் விசாரணை

கைதான 22 பேரில் இருவா் அகதிகள்: உளவுத்துறையினர் விசாரணை

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 22 பேரில் இருவா் அகதிகள் எனத் தெரியவந்தது.
Published on

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 22 பேரில் இருவா் அகதிகள் எனத் தெரியவந்தது. இதுகுறித்து மத்திய, மாநில உளவுத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டிலிருந்து தமிழா்கள் அகதிகளாக படகுகளில் தனுஷ்கோடிக்கும், ராமேசுவரத்துக்கும் வந்தவண்ணம் உள்ளனா். இவா்கள் மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 விசைப் படகுகளுடன் 22 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைது செய்தனா்.

இவா்களில், தீபன் (35), சுதாகா் (42) ஆகியோா் மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த அகதிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவா்களிடம் மீன்பிடிக்கச் செல்வதற்கான எந்த ஆவணங்களும் இல்லை.

இதுகுறித்து இலங்கை அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். அகதிகள் இருவரையும் மீன்பிடிக்க கடலுக்குள் அழைத்துச் சென்றது யாா் என்பது குறித்து மத்திய, மாநில உளவுத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com