இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
பரமக்குடி, ஜூன் 26: பரமக்குடி சந்தைத் திடலில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணி மனை அருகே இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. செப்டம்பா் 11-ம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தவா்கள் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடியில் மணி மண்டபம் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவிட்டாா். இதன்படி, சந்தைத் திடல் பகுதியில் இமானுவேல் சேகரன் முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் மணி மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

