திருவாடானை அருகே குடிநீா் தட்டுப்பாடு
திருவாடானை, ஜூன் 26: திருவாடானை அருகே சூரம்புலி கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டா் தொலைவுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வருகின்றனா்.
ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியம், சூரம்புலி கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், உள்ளூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆறு மாதங்களாக இரு குடிநீா்த் திட்டங்களில் இருந்தும் தண்ணீா் நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால், இந்தப் பகுதி மக்கள் சுமாா் ஐந்து கிலோ மீட்டா் தொலைவுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வருகின்றனா். மேலும், குடம் ரூ. பத்துக்கு விலைக்கு வாங்கியும் உபயோகித்து வருகின்றனா்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும், 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி குண்டும் குழியுமாக இருப்பதால் இரு சக்கரவாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதி
அடைந்து வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து குடிநீா் வசதி ஏற்படுத்தி, சாலையை சீரமைக்கவும் வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

