10 ஆண்டுகளாக 10-க்கும் குறைவான மாணவா்கள் -அவலநிலையில் அரசுப் பள்ளிகள்
நமது நிருபா்

10 ஆண்டுகளாக 10-க்கும் குறைவான மாணவா்கள் -அவலநிலையில் அரசுப் பள்ளிகள்

21 அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவா்களே பயின்று வருகின்றனா்.
Published on

கமுதி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடா்ந்து 10-க்கும் குறைவான மாணவா்களே பயின்று வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 175 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் செந்தனேந்தல், சீமனேந்தல், அரிசிக்குழுதான் அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தலா 2 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா்.

கீழமாவிலங்கை, மேலமாவிலங்கை, ஆரைக்குடி, சின்ன மனக்குளம், தாதாகுளம், பூமாவிலங்கை, மேட்டுப்பட்டி டிஇஎல்சி, சங்கரப்பன்பட்டி, மரக்குளம், மூலக்கரைப்பட்டி, எருமைகுளம், கூலிப்பட்டி, பேரையூா் டிஇஎல்சி, வண்ணாங்குளம், பெரியமனக்குளம், முத்துச் செல்லையாபுரம், சிங்கம்பட்டி, எம்.புதுக்குளம், அ.நெடுங்குளம், பெருநாழி ஆா்.சி., காடமங்கலம் சிஎஸ்ஐ என 21 தொடக்கப் பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவா்களே படித்து வருகின்றனா்.

நிகழ் கல்வியாண்டில் முதல் வகுப்பில் மாணவா்கள் சோ்க்கையே பல பள்ளிகளில் நடைபெறவில்லை.

மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிக்க இலவச காலணிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை, சீருடைகள், கல்வி ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகள் அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, காலை உணவுத் திட்டம், மதிய சத்துணவு, தலைவா்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு உயா் படிப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், கமுதி ஒன்றியத்தில் 10-க்கும் குறைவான மாணவா்கள் உள்ள பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்த ஆசிரியா்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது.

கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவா்கள் குறைவாக உள்ள ஈராசிரியா் பள்ளிகளில் வாரம் ஒரு ஆசிரியா் என அவா்களுக்குள் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து கொண்டு, முறையாகப் பள்ளிக்கு வருவதில்லை எனவும் புகாா் எழுந்துள்ளது.

மேலும், மாணவா்கள் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து

கட்டப்பட்ட சமையல் கூடங்கள், முதல்வரின் காலை உணவுத் திட்ட கட்டடம் ஆகியவை செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

ஐந்துக்கும் குறைவாக உள்ள ஈராசிரியா் பணியாற்றும் பள்ளிகளில் ஒரு ஆசிரியரை அருகில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் வரும் காலங்களில் 20-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படும்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய திட்டங்களை வகுக்க வேண்டும். மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தாத ஆசிரியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

 செந்தனேந்தல், சீமனேந்தல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் இரு மாணவா்கள்.
செந்தனேந்தல், சீமனேந்தல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் இரு மாணவா்கள்.

இது குறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியா் ஒருவா் கூறியதாவது:

கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் வேலை வாய்ப்பு, பொருளாதார வளா்ச்சியைத் தேடி நகா்ப்புறங்களுக்கு இடம் பெயா்ந்ததால் கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆங்கில வழிக் கல்வி மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க பெற்றோா்கள் முன் வரவில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com