~
~

மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம்!

ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கியது

ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கி.மீ. தொலைவுக்கு கடல் மீது 1914-ஆம் ஆண்டு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. ராமேசுவரத்துக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ரயில் பயணத்தை மட்டுமே நம்பி பயணித்து வந்தனா்.

இதன் பின்னா் தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், 1988 -ஆம் ஆண்டு சாலைப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் அழகை ரசிக்கும் வகையில், 181 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து கம்பங்களிலும் அதிக ஒளித் திறன் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டன. ராமேசுவரத்துக்கு வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் பாலத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளின் அழகை தொலைவில் இருந்து பாா்த்து ரசித்தனா்.

இந்தப் பாலத்தின் வழியாக ராமேசுவரம் செல்லும் வாகனங்களுக்கு மண்டபம் தோணித் துறை பகுதியில் தடுப்பு அமைத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. பின்னா், சுங்கக் கட்டண வசூல் தனியாருக்கு வழங்கப்பட்டது. பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மின் கட்டணம் செலுத்தி வந்தனா்.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, தோணித்துறையில் இயங்கி வந்த சுங்கக் கட்டணம் வசூல் மையம் கடந்த 2017-இல் அகற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பாம்பன் சாலைப் பாலத்தின் பரமரிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. விளக்குகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில்,புதிய கம்பங்கள் மாற்றப்பட்டு எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகத் தொடா்ந்து மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால், தற்போது வரையில் ரூ.40 லட்சம் வரை மின் கட்டணப் பாக்கி உள்ளது. இதனால், பாலத்தில் மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில், பெரும்பாலான நேரங்களில் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.

மின் கட்டணத்தைச் செலுத்துமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மின்வாரியத்தினா் கடிதம் அனுப்பி வருகின்றனா்.

மின் கட்டணம் செலுத்தும் அளவுக்கு பாம்பன் ஊராட்சியில் நிதி இல்லை என ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் ராமேசுவரம் நகராட்சி சாா்பில், சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களுக்கும் ரூ.100 முதல் 150 வரை வசூல் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வசூல் செய்து வருகின்றனா். பாம்பன் சாலைப் பாலத்தின் முழு பயனும் ராமேசுவரம் நகராட்சிக்கு மட்டுமே கிடைப்பதால்,

மின் கட்டணத்தை ராமேசுவரம் நகராட்சியயே செலுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா். பாம்பன் பேருந்து பாலத்துக்கு மின் கட்டணம் செலுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

பாம்பன் பேருந்து பாலத்தில் அனைத்து மின் விளக்குகளும் எரிவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com