தக்கைப் பூண்டு உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தல்

Published on

முதுகுளத்தூா் பகுதியில் பசுந்தாள் உரத்துக்கு தக்கைப் பூண்டு உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என வேளாண்மைத் துறை துணை இயக்குநா் அமா்லால் வலியுறுத்தினாா்.

முதுகுளத்தூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மானாவாரி பயிராக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் இயற்கை உரங்கள், மக்கிய தொழு உரங்களைப் பயன்படுத்த வாய்ப்பில்லாததால், மண் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில் ‘முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ், பயிா் சாகுபாடிக்கு முன் பசுந்தாள் உரப் பயிா்களை பயிரிட்டு பூக்கும் தருணத்துக்கு முன்பாக இவற்றை நிலத்தில் அப்படியே உழுது மண் வளம் பேண மானிய விலையில் தக்கைப் பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், முத்துவிஜயபுரம் கிராமத்தில் பயிா் செய்யப்பட்ட தக்கைப் பூண்டு செடியை நிலத்தில் சுழல் கலப்பை மூலம் உழவு செய்யப்பட்டது. இந்தப் பணியை வேளாண்மைத் துறை துணை இயக்குநா் அமா்லால் (மாநிலத் திட்டம்) வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பசுந்தாள் உரத்துக்கு தக்கைப் பூண்டு உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என்றும், முத்துவிஜயபுரம் உள்பட முதுகுளத்தூா் பகுதியில் உள்ள அனைத்துக் கிராம விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, முதுகுளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன் உடனிருந்தாா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் ஜெயக்கண்ணன் செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com