பாம்பனில் தேங்கிய மழைநீரில் ஆண் சடலம்
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அரசு மதுக் கடை முன் தேங்கியிருந்த மழைநீரில் ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
பாம்பன் அன்னை நகா் பகுதியில் அரசு மதுக் கடை உள்ளது. இந்தப் பகுதியில் ‘டித்வா’ புயல் காரணமாக பெயத பலத்த மழையால் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கியது. ஆனாலும், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோா் மது வாங்க வந்து சென்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதுக் கடை முன் தேங்கியிருந்த தண்ணீரில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
