நயினாா்கோவில் வட்டாரத்தில் நெல் பயிரில் பூச்சி தாக்குதல்
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் சம்பா பருவ சாகுபடி நெல் பயிரில் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த
வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலா்கள் வியாழக்கிழமை கள ஆய்வில் ஈடுபட்டனா்.
பரமக்குடி ஒன்றியம், நயினாா்கோவில் வட்டாரத்தில் 12,300 ஹெக்டோ் பரப்பளவில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுத் தாக்குதல் காணப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கா்மணியன், வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியல் துறை பேராசிரியா் ராம்குமாா் ஆகியோா் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, இலை மடக்குப் புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த களைகளை முற்றிலும் அழிக்க வேண்டும். அதிகமான தளைச்சத்து உரங்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட யூரியா உரத்தை வேப்பம் புண்ணாக்குடன் 5-க்கு 1 என்ற விகிதத்தில் கலந்து மேலுரமாக இடவேண்டும். மேலும், விளக்குப் பொறி அமைத்து மாலை 6 முதல் இரவு 10 மணிவரை தாய் அந்துப் பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினா்.
களப் பணியின்யில் வேளாண்மை உதவி இயக்குநா்கள் நாகராஜன், கே.வி.பானுபிரகாஷ், உதவி வேளாண்மை அலுவலா் பூபாலச் செல்வன், உதவி தொழில்நுட்ப அலுவலா் இளையராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

