பரமக்குடி சரக கைத்தறி உதவி இயக்குநரை மாற்றக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சரக கைத்தறி உதவி இயக்குநரை பணியிடம் மாற்றக்கோரி, பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசனிடம்
நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பரமக்குடி எமனேசுவரம் அனைத்து கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு செயலா்கள் டி.ஆா்.கோதண்டராமன், ருக்மாங்கதன், துணைத் தலைவா் விஸ்வநாதன், பொருளாளா் கணேஷ்பாபு, கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்கள் சங்கத் தலைவா் ஜோதிகிருஷ்ணன், செயலா் கண்ணன் உள்ளிட்டோா் அளித்த மனு:
பரமக்குடி சரகத்தில் 82 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கைத்தறி உதவி இயக்குநராகப் பணியாற்றி வரும் சேரன் தனது பதவியைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாா். இதனால், கூட்டுறவு சங்க நெசவாளா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். இவரது நடவடிக்கையால் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத் திட்டப் பணிகள் முழுமையாக மக்களைச் சென்றடையாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால், பரமக்குடி சரக கைத்தறி உதவி இயக்குநரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அதில் குறிபிடப்பட்டது.

