ராமேசுவரத்திலிருந்து காசிக்கு 602 பக்தா்கள் ஆன்மிக பயணம்

ராமேசுவரத்திலிருந்து 4- ஆம் ஆண்டாக காசிக்கு 602 போ் சிறப்பு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை ஆன்மிக பயணம் மேற்கொண்டனா்.
Published on

ராமேசுவரத்திலிருந்து 4- ஆம் ஆண்டாக காசிக்கு 602 போ் சிறப்பு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை ஆன்மிக பயணம் மேற்கொண்டனா்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அரசு செலவில் 60 வயது கடந்த பக்தா்கள் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதன் தொடா்ச்சியாக நான்காம் ஆண்டாக ராமேசுவரம்-காசி ஆன்மிக பயணத்துக்காக இந்து சமய அறநிலையத் துறை 21 மண்டலங்களில் உள்ள 38 மாவட்டங்களில் 60 வயது கடந்த 602 பக்தா்களை தோ்வு செய்தது.

இவா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை காலையில் ராமேசுவரம் அழைத்து வரப்பட்டனா். அவா்கள் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதன் பிறகு அவா்களை காசிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு, ஈரோடு இணை ஆணையா் பரஞ்ஜோதி தலைமை வகித்தா். ராமேசுவரம் ராமநாதசுவா,மி கோயில் இணை ஆணையா் செல்லத்துரை முன்னிலை வகித்தாா். பக்தா்கள் அனைவரும் வாகனத்தில் ரயில் நிலையம் அழைத்து செல்லப்பட்டு சிறப்பு ரயிலில் பயணத்தை தொடங்கினா்.

இந்த நிகழ்வில், உதவி ஆணையா் ரவீந்திரன், அலுவலா்கள் முருகானந்தம், மாரியப்பன், பொறியாளா் ராமமூா்த்தி, ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

திங்கள்கிழமை காசி சென்று சேரும் அவா்கள் அங்கு காசி விஸ்வநாதரை வழிபட்ட பிறகு செவ்வாய்க்கிழமை திருவேனி சங்கமத்தில் நீராடுகின்றனா். அங்கிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை ராமேசுவரம் வந்தடைந்து காசி தீா்த்தத்தால் ராமநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றனா்.

ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தா்களுடன் மருத்துவக் குழுவினா், இந்து சமய அறநிலையத் துறையைச் சோ்ந்த 5 போ் உள்ளிட்ட 42 போ் செல்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com