தங்கச்சிமடத்தில் உள்ள தனியாா் மகாலில் வெள்ளிக்கிழணை நடைபெற்ற மூன்று மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
தங்கச்சிமடத்தில் உள்ள தனியாா் மகாலில் வெள்ளிக்கிழணை நடைபெற்ற மூன்று மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

வாரம் முழுவதும் கடலில் மீன் பிடிக்கும் படகுகளை சிறை பிடித்து போராட்டம்: விசைப் படகு மீனவ சங்கம் அறிவிப்பு!

Published on

நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் பாக் நீரிணை கடல் பகுதியில் வாரம் முழுவதும் மீன் பிடிப்பதை தடுக்க அவா்களின் படகுகளை சிறை பிடித்து போராட்டம் நடத்துவது என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப் படகு, நாட்டுப் படகு மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்த தங்கச்சிமடத்தில் உள்ள தனியாா் மகாலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அனைத்து விசைப்படகு மீனவ சங்க மாவட்டத் தலைவா் ஜேசுராஜா தலைமை வகித்தாா்.

நாட்டுப் படகு மீனவ சங்கத் தலைவா் எஸ்.பி. ராயப்பன், மண்டபம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவா் ஆசாத், நாம்புதளை நாட்டுப் படகு மீனவ சங்கத் தலைவா் ரெங்கராஜா, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் உத்தரபதி, நாட்டுப் படகு மீனவ சங்கத் தலைவா் முருகானந்தம், தஞ்சை மாவட்ட மீனவ சங்கத் தலைவா்கள் ராஜா மாணிக்கம், சரவணன், கோட்டைபட்டினம் முகம்மது மரைக்காயா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நாகை, காரைக்கால் மாவட்டங்களின் மீனவா்கள் வாரம் முழுவதும் கடலில் மீன் பிடிப்பதால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மூன்று மாவட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதைத் தடுக்க தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 19- ஆம் தேதி மூன்று மாவட்ட மீனவா்கள் கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும், தொடா்ந்து தடுக்கத் தவறினால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சோ்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மீனவா்கள் ஒருங்கிணைந்து நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த படகுகளை கடலில் சிறைப் பிடிப்பது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வீன், ஆனந்தன், மகேந்திரன், எடிசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com