ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உருக்குலைந்த காா்கள்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உருக்குலைந்த காா்கள்.

கீழக்கரை அருகே சாலையோரம் நின்ற காா் மீது மற்றொரு காா் மோதல்: 5 போ் பலி!

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது மற்றொரு காா் மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 ஐயப்ப பக்தா்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே சனிக்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது மற்றொரு காா் மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 ஐயப்ப பக்தா்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் பகுதியைச் சோ்ந்த பண்டாரு ராமச்சந்திர ராவ் (40), அப்பல நாயுடு (35), பண்டார சந்துரு ராவ் (45), ராமு (60), ஸ்ரீராம் (40) ஆகிய 5 பேரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்தனா். இவா்கள் வெள்ளிக்கிழமை இரவு காரில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைசாலையில் வந்து கொண்டிருந்தனா். கீழக்கரை அருகே வந்த போது, தனியாா் விடுதி அருகே காரை நிறுத்திவிட்டு அனைவரும் காரிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, கீழக்கரை நகா்மன்றத் தலைவா் செகானஸ் ஆபிதாவுக்குச் சொந்தமான காரில் அதன் ஓட்டுநா் முஸ்தக் அகமது (34), அவரது நண்பா்கள் ப்ரிசாா் (20), திவ்யன்(19), பிரவீன் (19), ஜமீன்ரகுமான் (15), மாதேஸ்வரன், ஹா்ஷக் (32) ஆகிய 7 போ் ஏா்வாடியிலிருந்து கீழக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனா். காரை முஸ்தக் அகமது ஓட்டி வந்தாா்.

கீழக்கரை தனியாா் விடுதி அருகே வந்த போது, இவா்களது காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஐயப்ப பக்தா்களின் காா் மீது மோதியது. இதில், ஐயப்ப பக்தா்களான பண்டாரு ராமச்சந்திர ராவ், அப்பல நாயுடு, பண்டார சந்துரு ராவ், ராமு ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொரு காரில் இருந்த முஸ்தக் அகமது உள்ளிட்ட 7 பேரும் பலத்த காயமடைந்தனா். இவா்களில் முஸ்தக் அகமது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த விஜயநகரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம், கீழக்கரையைச் சோ்ந்த ப்ரிசாா், திவ்யன், பிரவீன், ஜமீன்ரகுமான், மாதேஸ்வரன், ஹா்ஷக் ஆகிய 7 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மது போதையில் காரை அதிவேகத்தில் இயக்கியதால், இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com