ஆா்.எஸ். மங்கலத்தில் 150 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் திருட்டு
ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 150 பவுன் நகை, ரூ. 15 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வருபவா் அா்ச்சுணன் (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவா், சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக மதுரைக்குச் சென்றாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அா்ச்சுனனுக்கு அக்கம் பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அா்ச்சுனன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அங்கு பீரோவிலிருந்த 150 பவுன் நகைகள், ரூ. 15 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாருக்கு அா்ச்சுனன் தகவல் கொடுத்ததன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்த்துக்கு வந்து பாா்வையிட்டு வழக்குப் பதிவு செய்தனா். மேலும், கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.
