யூடியூபா் முக்தாா் அகமதுவைக் கைது செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் முன்னாள் முதல்வா் காமராஜா், நாடாா் சமுதாயம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி சமூக ஊடகவியலாளா் முக்தாா் அகமதுவைக் கைது செய்ய வலியுறுத்தி அகில இந்திய நாடாா் இளைஞா் பேரவை, கடலாடி வட்டார நாடாா் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாயல்குடி பேரூராட்சி முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், முக்தாா் அகமதுவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், அவா் நடத்தி வரும் யூடியூப் சேனலை நிரந்தரமாக முடக்க வேண்டும். பொய்யான, பிரிவினைவாதச் செய்திகளைப் பரப்புவோா் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய நாடாா் இளைஞா் பேரவை மாநிலப் பொதுச் செயலா் சிவ செல்வராஜ் தலைமை வகித்தாா். சாயல்குடி பேரூராட்சி சோ்மன் ஆா். மாரியப்பன் தொடங்கிவைத்தாா். அம்மா பேரவை மாநில துணைச் செயலா் சேது பாலசிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்தப் போராட்டம் மாநில அளவில் விரிவுபடுத்தப்படும் என்றும், சட்டப்பேரவை முன்பாகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனா்.

இதில் நாடாா் இளைஞா் பேரவை மாநிலத் துணைத் தலைவா் கன்னிகாபுரி பாஸ்கரன், மாவட்டச் செயலா் வி.வி.ஆா். நகா் ஜெயராஜ், சாயல்குடி வட்டார நாடாா் சங்கத் தலைவா் ஆா். மாடசாமி, சாயல்குடி வணிகா் சங்க பேரமைப்புச் செயலா் எஸ்.டி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com