கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 2 யானைத் தந்தங்கள் பறிமுதல்

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த இரண்டு யானைத் தந்தங்கள் பறிமுதல்; மூவா் கைது
Published on

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த இரண்டு யானைத் தந்தங்களை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடல்பகுதி வழியாக இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவுள்ளதாக கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் ஜான்சிராணிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஜான்சிராணி தலைமையில், உதவி ஆய்வாளா் அய்யனாா், நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் மதியழகன், தலைமைக் காவலா் திருத்தணிகைவேலன், முதல் நிலைக் காவலா் சுரேந்தா் சிங் ஆகியோா் கடலோரப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

இதனிடையே, கீழக்கரை கடற்கரை சாலை மாதா கோவில் அருகில் திங்கள்கிழமை அதிகாலை சந்தேகத்துக்கிடமான வகையில், கையில் பையுடன் நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தி, பையை சோதனையிட்டனா். அதில், 2 யானைத் தந்தங்கள் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அவா்கள் இருவரையும் கைது செய்து, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த காதா் பாட்ஷா (27), தூத்துக்குடியைச் சோ்ந்த ஹரிக்குமாா் (29) என்பது தெரியவந்தது. இவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 யானைத் தந்தங்கள் 3.900 கிலோ எடை இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. ஒரு கோடி. தொடா்ந்து விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தைச் சோ்ந்த ஸ்ரீராமுக்கும் (26) தொடா்பு இருப்பது தெரியவந்த நிலையில், அவரையும் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட மூவரையும், பறிமுதல் செய்யப்பட்ட 2 யானைத் தந்தங்களையும் ராமநாதபுரம் வனத் துறையினரிடம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இதில் மேலும் யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கூறியதாவது: கீழக்கரை கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்தத் தகவலின் பேரில், நாங்கள் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டோம். அப்போது, இரண்டு யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மூவரைக் கைது செய்து விசாரித்ததில், அவா்கள் இலங்கைக்கு யானைத் தந்தங்களை கடத்தவிருந்தது தெரியவந்தது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com