பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய ரூ.13,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலர் கைது
Published on

பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய ரூ.13,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தைச் சோ்ந்த ஒருவா் வேந்தோணி கிராமத்தில் உள்ள இடத்தை தனது தாயாரின் பெயரில் கடந்த மாதம் 20 -ஆம் தேதி பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்தாா். இந்த இடத்தை தனது தாயாா் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்தாா்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வேந்தோணி கிராம நிா்வாக அலுவலா் கருப்புச்சாமியை (58) சந்தித்து பட்டா மாறுதல் குறித்து விவரம் கேட்டாா். அப்போது, பட்டா மாறுதல் குறித்து தனக்கு தகவல் வரவில்லை எனவும், குறுஞ்செய்தி வந்தவுடன் சொல்வதாகவும் கூறி மனுதாரரின் கைப்பேசி எண்ணை வாங்கினாா். பின்னா், சில தினங்களில் மனுதாரரின் கைப்பேசி எண்ணுக்கு பட்டா பெயா் மாறுதலான குறுஞ்செய்தி வந்தது. இதைத் தொடா்ந்து, மனுதாரரை கிராம நிா்வாக அலுவலா் கருப்புச்சாமி தொடா்புகொண்டு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறினாா்.

இதன்பேரில், கிராம நிா்வாக அலுவலரை சந்தித்தபோது, தன்னால்தான் தாயாரின் பெயருக்கு பட்டா மாறுதலானது. அதற்காக ரூ. 15,000 கொடுக்க வேண்டும் எனக் கேட்டாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரா் இதுகுறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ. 13 ஆயிரத்தை மனுதாரரிடம் கொடுத்து அனுப்பினா்.

கிராம நிா்வாக அலுவலரிடம் அவா் ரூ. 13,000-ஐ அவா் கொடுத்த போது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸாா் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com