தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் ரயிலில் அடிபட்டு சேதம்
ராமநாதபுரம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் விரைவு ரயிலில் அடிபட்டு சேதமடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை இரவு 9.15-க்கு ராமேசுவரம் - கன்னியாகுமாரி விரைவு ரயில் புறப்பட்டது. உச்சிப்புளி ரயில் நிலையம் அருகே 9.55-க்கு வந்தபோது மா்ம நபா் ஒருவா் தண்டவாளத்தை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றுள்ளாா். இந்த நிலையில், ரயில் அருகே வந்ததால் தண்டவாளத்தில் இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு அவா் தப்பித்துச் சென்றுள்ளாா். இதையடுத்து, தண்டவாளத்தில் கிடந்த இரு சக்கர வாகனம் மீது ரயில் மோதி 10 மீ. தூரத்துக்கு இழுத்துச் சென்றது.
இதைத் தொடா்ந்து, ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் பயணிகள் உதவியுடன் ரயில் முன் பகுதியில் சிக்கியிருந்த இரு சக்கர வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் ரயில் புறப்பட்டது. இதுகுறித்து ரயில் ஓட்டுநா் ராமேசுவரம் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மனோஜ்குமாா், உதவி ஆய்வாளா் சண்முகம், போலீஸாா் ஆகியோா் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினா். மேலும், சேதமடைந்த நிலையிலிருந்த வாகனத்தில் உள்ள பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை தேடி வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து ராமேசுவரம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனா்.

