ஏலச்சீட்டு நடத்தி ரூ. 40 லட்சம் மோசடி: காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு
ராமேசுவரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 40 லட்சம் பண மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சிவகாமி நகரைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் மனைவி ரெஜி.
இவா், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏலச்சீட்டு தொடங்கி ரூ. 2 லட்சம் வீதம் 20 பேரிடம் ரூ. 40 லட்சம் பெற்றுள்ளாா். இதையடுத்து, அவா் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை திருப்பித் தராமல் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏலச்சீட்டில் பணம் செலுத்திய பெண்கள் தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி, ராமேசுவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனராம். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்தனா். இதையடுத்து, அவா்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேன்களை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா், அவா்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
