ராமேசுவரத்தில் பரவும் மா்மக் காய்ச்சல்: சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

ராமேசுவரம் பகுதியில் மா்மக் காய்ச்சல் பரவி வருவதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

ராமேசுவரம் பகுதியில் மா்மக் காய்ச்சல் பரவி வருவதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

டித்வா புயல் காரணமாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் தொடா்ந்து பெய்த மழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதையடுத்து, தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா். இருப்பினும் முழுமையாக தண்ணீா் வெளியேற்றப்படாததால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. பெரும்பாலும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ராமேசுவரம் அரசு மருத்துவமனை, தங்கச்சிமடம், பாம்பன் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் காய்ச்சலுக்கு மருத்துவச் சிகிச்சை வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மேலும், காய்ச்சல் தொடா்ந்து நீடிப்பதால் பெரும்பாலனோா் தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனா்.

இந்த நிலையில், மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறையினா் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், மீனவா்கள் அதிகளவில் உள்ள பகுதிகளில் 10 நாள்களுக்கு மேலாக தண்ணீா் தேங்கி உள்ளதால் அதிகளவில் கொசுக்கள் காணப்படுகின்றன. இதையடுத்து, கொசுக்களை ஒழிக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com