ராமநாதபுரம்
கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
ராமேசுவரத்தில் நாய் துரத்திய போது, கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
ராமேசுவரம் அருகேயுள்ள சுடுகாட்டம்பட்டி பகுதியில் அமைந்துள்ள செங்கோல் மாதா தேவாலய வளாகத்தில் கடந்த புதன்கிழமை சுற்றித்திரிந்த ஆண் மயிலை தெரு நாய்கள் துரத்தின. இதனால், தப்பியோடிய மயில் அங்கிருந்த 40 அடி ஆழ பழைமையான கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றில் 5 அடி ஆழத்தில் கிடந்த தண்ணீரில் மயில் தத்தளித்தது. இதைக் கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். பின்னா், வனத் துறையினா் வியாழக்கிழமை காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று மயிலை விடுவித்தனா்.

