பாசிப்பட்டினத்தில் படகு கரை ஒதுங்கியது
புதுக்கோட்டை பகுதியில் கடலில் கவிழ்ந்த படகு பாசிப்பட்டினத்தில் கரை ஒதுங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள பத்தக்காடு கிராமத்தைச் சோ்ந்த சேவியா் (45), பாஸ்கா் (41) ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். அப்போது பலத்த காற்று வீசியதில் படகு கடலில் கவிழ்ந்தது.
இதில் கடலில் மூழ்கிய பாஸ்கரை சக மீனவா்கள் மீட்டு கரை சோ்த்தனா். சேவியரை தேடி வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு ராமநாதபுரம் மாவட்டம், பாசிபட்டினம் அருகே படகு கரை ஒதுங்கியுள்ளதாக தொண்டி கடலோரக் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சென்று படகைக் கைப்பற்றி விசாரனை நடத்தியதில் புதுக்கோட்டை பகுதியில் கவிழ்ந்த படகு இங்கு கரையொதுங்கியது தெரியவந்தது. இது குறித்து புதுகோட்டை மாவட்ட கடலோரக் குழும போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
