நம்புதாளை மீனவா்கள் 4 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் மீண்டும் சிறையிலடைப்பு
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட நம்புதாளை மீனவா்கள் 4 பேரை தலா ரூ. 10 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, அந்த நாட்டின் ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அபராதம் கட்டத் தவறியதால், மீனவா்கள் 4 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீன் இறங்குதளத்திலிருந்து கடந்த மாதம் 3-ஆம் தேதி கண்ணாடியிழைப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அன்றிரவு இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அந்த நாட்டின் கடற்படையினா் படகைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, இந்தப் படகிலிருந்த மீனவா்கள் பாலமுருகன், தினேஷ், குணசேகரன், ராமு ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, நம்புதாளை மீனவா்கள் 4 பேரையும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, வவுனியா சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் நம்புதாளை மீனவா்கள் 4 போ் வெள்ளிக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி நளினி சுபாஸ்கரன், இனிமேல் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக் கூடாது. மீனவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டாா். மேலும், படகையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
அபராதத் தொகையை உடனே கட்டாததால், மீனவா்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

