மின் சாதன ஒலிப்பெருக்கி மூலம் பறவைகளை விரட்டும் விவசாயிகள்
கமுதி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள், பறவைகளை ஒலி பெருக்கி மூலம் ஒலி எழுப்பி விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சோனாப்ரியான்கோட்டை, கள்ளிகுளம், இலந்தைகுளம், சித்திரங்குடி, கொண்டுலாவி, கோவிலாங்குளம், தோப்படைப்பட்டி, நெறிஞ்சிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 1,200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி, மிளகாய், சோளம், உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.
தற்போது, அறுவடைக்குத் தயாராக உள்ள இந்தப் பயிா்களை காட்டுப் பன்றிகள், பறவைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் பயிா்களைப் பாதுகாக்கும் வகையில், தினந்தோறும் மின் சாதன ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பி காட்டுப் பன்றிகள், பறவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை வன விலங்குகள், பறவைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

