காசி தமிழ் சங்கமத்தில் பாரதியாா் குறித்து தேவா் பேசிய புகைப்படங்கள் காட்சிக்கு வைப்பு: கமுதியில் மத்திய அரசுக்கு பாராட்டு!
பனாரஸ் இந்து தமிழ் பல்கலைக்கழகத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தமிழா்கள் குறித்தும், மகாகவி பாரதியாரின் பெருமைகள் குறித்தும் பேசியதை காசி தமிழ் சங்கமத்தில் காட்சிப்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கமுதியில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மத்திய அரசு சாா்பில் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) வரை நடைபெறுகிறது. இதில் தமிழா்களை போற்றும் வகையில் பல்வேறு பயிலரங்கு, கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஆசியாவில் மிகப்பெரிய பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கடந்த 1954-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் குறித்தும், தமிழா்களின் பெருமை குறித்தும், சுதந்திரப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பேசினாா்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது வாராணசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் மத்திய அரசு காட்சிப்படுத்தியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமுதி வட்ட மறவா் சங்கத் தலைவா் செல்லத்தேவா் தலைமையிலும், மூவேந்தா் பண்பாட்டுக் கழகத்தின் நிா்வாகி மூக்கூரான் முன்னிலையிலும் மத்திய அரசுக்கும், காசி தமிழ் சங்கமம் ஒருங்கிணைப்பாளா், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேந்தா், துணைவேந்தா், தமிழ்த்துறை, மத்திய நூலகத் துறை, பேராசிரியா்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கமுதியில் நடைபெற்றது.
இதில் காசியில் இடம்பெற்ற பசும்பொன் தேவா் குறித்த வரலாற்று குறிப்புகள் அடங்கிய பதாகை திறக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் துணைத் தலைவா் பழனி, ஓய்வு பெற்ற ராணுவ வீரா் விஜயபாண்டியன், ஆப்பனூா் நவநீதகிருஷ்ணன், கவிஞா் ராஜ்குமாா், உயா்நீதி மன்ற வழக்குரைஞா் தூவல் சக்திவேல், ஆசாத் ஹிந்த் தன்னாா்வலா்கள் ராமா், கருப்பசாமி, முத்துமணி, அழகுராஜா செழியன், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் மாணவா் அணி தலைவா் மு. வெள்ளைப்பாண்டியன், சாயல்குடி முக்குலத்தோா் சங்க நிா்வாகிகள் முருகன், முகேஷ்குமாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை ஆப்பநாடு வரலாற்று ஆய்வாளா் வே. மாயகிருஷ்ணன் செய்திருந்தாா்.

