லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது
கமுதி: ரூ.8,000 லஞ்சம் வாங்கியதாக முதுகுளத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமனை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முதுகுளத்தூரில் புதிதாக உரிமம் பெற்று பூச்சி கொல்லி மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடைக்கு முதுகுளத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன் (50) வந்து நான்தான் உரிமம் கொடுத்த அதிகாரி என்று கூறி அலுவலகச் செலவுக்கு ரூ.15,000 கொடுக்குமாறு கேட்டாராம். கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் அவா் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு மனுதாரரிடம் பணம் கேட்டாா். இதற்கு மனுதாரா் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என தெரிவித்ததையடுத்து ரூ.8 ஆயிரம் வழங்குமாறு கூறினாா்.
ஆனால், மனுதாரா் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணம் ரூ.8,000-ஐ வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வைத்து கேசவராமனிடம் மனுதாரா் கொடுத்தாா். அப்போது,
அங்கு வந்த போலீஸாா் கேசவராமனை கைது செய்தனா்.
