மின்னல் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி
கமுதியில் மின்னல் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 20 லட்சத்துக்கான காசோலை புதன்கிழமை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அம்மன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் நல்லமருது (28). இவா் கமுதியில் அமைந்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கணக்குத் தொடங்கி, விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளாா். இதனிடையே, கடந்த ஏப். 22-ஆம் தேதி இவா் தலைவநாயக்கன்பட்டி - நெடுங்குளம் கிராமங்களுக்கிடையே மாடு மேய்த்தபோது மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், நல்லமருதுவின் குடும்பத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா் செல்வகுமாா், கமுதி கிளை மேலாளா் ராஜேஸ்வரன் ஆகியோரது முன்னிலையில், மண்டல மேலாளா் ஸ்டான்லி ஜோன்ஸ், ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை நல்லமருதுவின் மனைவி மாரீஸ்வரியிடம் வழங்கினாா்.

