கமுதியில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

கமுதி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Published on

கமுதி வட்டாட்சியா் அலுவலகம் முன் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ சுற்றி, கையில் கஞ்சி களையம் ஏந்தி விவசாயிகள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு தமிழ்நாடு வைகை விவசாய சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். சங்கத்தின் கமுதி ஒன்றியச் செயலா் செல்வேந்திரன், ஒன்றிய துணைச் செயலா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது விவசாயிகள் காதில் பூ சுற்றி, கையில் கஞ்சி களையம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் தலைவா் பாக்கியநாதன் கண்டன உரையாற்றினாா். மாநில கௌரவத் தலைவா் மிக்கேல், மாவட்டச் செயலா் மரகதவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் கமுதி வட்டத்தில் கடந்த 2024-25 ஆம் ஆண்டு காலதாமதமாகவும், தொடா்ந்து பெய்த பலத்த மழையாலும் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நெல் பயிருக்கு பயிா் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும். கமுதி வட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பிறகு கோரிக்கைகளை மனுவாக மண்டல துணை வட்டாட்சியா் வெங்கடேஸ்வரனிடம் அளித்தனா். இதில் கமுதி வட்டத்தில் உள்ள கள்ளிக்குடி, இலந்தைகுளம், பேரையூா், நெருஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, சாமிபட்டி, சோ்ந்தகோட்டை, செங்கோட்டைபட்டி, சங்கரப்பன்பட்டி, புதுக்கோட்டை, கீழவலசை, பாக்குவெட்டி, கருங்குளம், இடையங்குளம், தொட்டியபட்டி, மருதங்கநல்லூா், கடமங்குளம், புல்வாய்குளம், உப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com