தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்
தனுஷ்கோடி வரையில் நான்கு வழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின்கட்கரியை தில்லியில் சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் பாம்பனிலிருந்து ராமேசுவரம் வரையிலான சாலையை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீட்டித்து நான்கு வழிச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும்.
மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மந்திரிஓடை, நரிக்குடி, ஆவியூா் ஆகிய ஊா்களுக்கு அருகே சா்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். மேலும் ஆவியூா், மந்திரிஓடை, நரிக்குடி, மீனாட்சிபுரம் கிராமம், வண்ணாங்குண்டு கிராமம், மாந்தோப்பு, காரியாபட்டி, கள்ளிக்குடி, கல்குறிச்சி, விருதுநகா் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ள இடங்களில் உயா்மின் கோபுர விளக்குகள் அமைத்துத் தர வேண்டும் என்றாா் அவா்.
