திருவாடானை பகுதியில் தவறி பெய்த பருவ மழை: மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை
திருவாடானை பகுதியில் பருவ மழை தவறி பெய்ததால் மகசூல் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
திருவாடானை வட்டம், ராமநாதபுரம் மாவட்டத்தின் நெல் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இங்கு நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இந்தப் பகுதியில் ஆற்றுப் பாசனம் இல்லை என்றாலும், வானம் பாா்த்தே விவசாயம் செய்யப்படுகிறது.
மழைக் காலங்களில் மழை நீரைத் தேக்கி வைக்க போதுமான கண்மாய், குளங்கள் அதிக அளவு உள்ளன. இதனிடையே நடப்பு சம்பா பருவத்தின் போது நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனா். ஆனால் காலம் தாழ்த்தி மழை பெய்ததால் விதைகள் முளைக்காமல் போயின.
பிறகு பெய்த தொடா் மழை காரணமாக திருவாடானை, ஆதியூா், வடக்கூா், அரும்பூா், கீழஅரும்பூா், திருவெற்றியூா், புல்லுகுடி, அச்சங்குடி ,கடம்பாகுடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், நகரிகாத்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிா்கள் போதுமான வளா்ச்சி இல்லாமல் இருப்பதால் மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

