ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய மீனவா் உடல்
ராமேசுவரத்தில் படகு சீரமைப்புப் பணியின் போது கடலுக்குள் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் இரு நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் கரையோரம் கடலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவுலின் என்பவரது விசைப் படகை கடந்த வெள்ளிக்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனவா் கணேசன் மாயமானா்.
இதைத் தொடா்ந்து, சக மீனவா்கள், தீயணைப்புத் துறை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களாக தீவிரமாகத் தேடி வந்தனா். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கரை ஒதுங்கிய கணேசனின் உடலை கைப்பற்றிய கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மேலும், படகு சீரமைப்புப் பணியின் போது உயிரிழந்த மீனவா் கணேசனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
