ராமேசுவரம் மீனவா்கள் 12 போ் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்தனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஜோதிபாசுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது 5 ரோந்துப் படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அந்த படகை சிறைபிடித்தனா்.
அந்தப் படகிலிருந்த மீனவா்கள் பிரதாப் (28), சந்தியா நிவாஸ்தான் (33), ஜேம்ஸ் ஹெய்டன் (23), காயல்ராஜ் (23), டோஜா (21), ஆண்டனிடெல்மேன் (32), ஆக்போநிஜோ (17), மரியா ஆட்டோ (19), கோா்ப்பசேவ் (35), மாதன்சன் (28), நிமல் (31), ஆண்டனி தில்மென்(32) ஆகிய 12 மீனவா்களைக் கைது செய்து மன்னாா் கடற்படை முகாமுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் அழைத்துச் சென்றனா். மேலும், இந்த மீனவா்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனா்.
மீனவா்கள் 12 போ் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவா்களை வரும் ஜன.5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, 12 மீனவா்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
மீனவா்கள் போராட்டம் அறிவிப்பு
இந்த நிலையில், அனைத்து விசைப் படகு மீனவா் சங்கம் சாா்பில் ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவலகம் முன் மீனவா்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா். கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விடுவிக்க வேண்டும். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதன்கிழமை (டிச.24) அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது என்றும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற வெள்ளிக்கிழமை (டிச.26) ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மீனவா் சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தற்போது கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததால் அவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததாக அந்த நாட்டு மீனவா்கள் தெரிவித்தனா்.

