விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்கும் திட்டமில்லை: காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ
ராமநாதபுரம் அருகே விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்கும் திட்டமில்லை என சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியப் பகுதியில் கும்பரம், பெருங்குளம், ரெகுநாதபுரம், வாலாந்தரவை ஆகிய ஊராட்சியில் 700 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தி மத்திய அரசு உடான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதனால், கும்பரம், ராமன்வலசை, பூசாரிவலசை, கோகுல் நகா், கிருஷ்ணா நகா், டி.கே. நகா், வாலாந்தரவை, தெற்குவாணி வீதி, படைவெட்டி வலசை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், 4 லட்சம் தென்னை மரங்கள்,10 லட்சம் பனை மரங்கள், எல், பயறு, கடலை, நெல் சாகுபடி செய்யும் விவசாயம் நிலங்கள் அழிக்கப்படும் சூழலும் உருவாகும். இதனால், விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் எனக் கூறி 10 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தொடா்ந்து போராட்டங்களை மேற்கொண்டதுடன், வருகிற சட்டப்பேரவை தோ்லைப் புறக்கணித்து ஆதாா், குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாக அறிவித்தனா்.
இந்த நிலையில், கும்பரம் கிராமத்தில் 10 கிராம மக்கள் பங்கேற்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், வருவாய்க் கோட்டாட்சியா் ஹபீபு ரகுமான், வட்டாட்சியா் காளிதாஸ், வருவாய்த் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.
இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் கூறியதாவது:
விமான நிலையம் அமைக்க 10 இடங்கள் ஆய்வு செய்வது வழக்கம். ஆனால், அதிகளவில் விவசாயம், குடியிருப்புகள் உள்ள பகுதியில் விமான நிலையம் அமைக்க வாய்ப்பு இல்லை. கீழக்கரை வட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மாணிக்கநேரி பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகளவில் உள்ளன. அந்த இடத்தில்தான் விமான நிலையம் அமைக்கப்படும். இதனால், கும்பரம் சாா்ந்த 10 கிராம மக்கள் அச்சப்படத் தேவையில்லை என உறுதி அளித்தாா்.
இதையடுத்து, தோ்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக கிராம மக்கள் அறிவித்தனா். மேலும், தங்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சட்டப்பேரவை உறுப்பினா், வருவாய்க் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் அளித்தனா்.

